வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு


வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 12:25 AM IST (Updated: 9 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

கரூர்
இன்று வாக்குப்பதிவு
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 6 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-1, கிராம ஊராட்சி தலைவர்-1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-12 ஆகிய 15 பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 15 ஆயிரத்து 369 ஆண் வாக்காளர்களும், 16 ஆயிரத்து 814 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 32 ஆயிரத்து 186 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 2 ஆயிரத்து 133 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 348 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளர் என மொத்தம் 4 ஆயிரத்து 482 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கிராம ஊராட்சி தலைவருக்கு 1,463 ஆண் வாக்காளர்களும், 1,487 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 950 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கிராம ஊராட்சி 7 வார்டு உறுப்பினருக்கு 1,445 ஆண் வாக்காளர்களும், 1,542 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,987 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 20 ஆயிரத்து 410 ஆண் வாக்களர்களும், 22 ஆயிரத்து 191 பெண் வாக்காளர்களும், இதர 4 வாக்களர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 605 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
56 மையங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், 10 மையங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கும், 6 மையங்களில் கிராம ஊராட்சி தலைவருக்கும், 6 மையங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும் என மொத்தம் 78 வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தயார் நிலையில் உள்ளது. இதில் கிராம ஊராட்சி வார்டு பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பதவியிடங்களுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 16 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 8 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 19 பேரும் என மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், மை, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் மினி லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story