புதுக்கோட்டையில் 145 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 145 வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை,
இன்று வாக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி, 5 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 41 பதவிகளுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் கீழதானியம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவியில் 33 பேர் போட்டியின்றி தேர்வாகினர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள பதவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வார்டு உறுப்பினர்
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண்.9, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 5, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்காடு, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை, மறவாமதுரை ஆகிய கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி வார்டு எண்.2 மற்றும் திருவாக்குடி ஊராட்சி வார்டு எண்.5, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி வார்டு எண்.4, திருமயம் ஊராட்சி ஒன்றியம், நெய்வாசல் ஊராட்சி வார்டு எண்.9, பி.அழகாபுரி ஊராட்சி வார்டு எண்.4, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குலமங்களம் தெற்கு ஊராட்சி வார்டு எண்.9, வேங்கிடகுளம் ஊராட்சி வார்டு எண்.7 மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வார்டு எண்.7 என மொத்தம் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
145 வாக்குச்சாவடிகள்
வாக்குப்பதிவுக்காக மொத்தம் 145 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 12-ந் தேதி நடைபெறும். தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் பொருட்கள் அனுப்பி வைப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பொருட்கள் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் அனைத்து பொருட்களும் உரிய முறையில் வைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தயாராக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 145 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக வீடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான பணி நியமன ஆணை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றி வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக முககவசம், சானிடைசர், தெர்மாமீட்டர், கையுறை, கொரோனா உடை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story