நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம்


நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம்
x
தினத்தந்தி 9 Oct 2021 12:53 AM IST (Updated: 9 Oct 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முத்தூர்
நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கான்கிரீட் தரைப்பாலம்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தரைப்பாலத்தின் இருபுறமும் பாதுகாப்புக்கு தடுப்புச்சுவர்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.
இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கேயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கார், லாரி, டெம்போ, வேன், சரக்கு ஆட்டோ ஆகிய கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடந்து ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், சிவகிரி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
100 ஆண்டு பழமையானது
மேலும் இப்பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் போக்குவரத்து வழிப்பாதையாகவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் சாலை தரைப்பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்வான நிலையிலேயே இருந்து வருகிறது. மேலும் தரைப்பாலத்தின் இருபுறமும் தற்போது சீமை கருவேலமரங்கள் நீண்டு வளர்ந்து புதர் மண்டி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.
மேலும் மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாய்ந்து வரும் மழைநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். மேலும் இந்த கான்கிரீட் சாலையில் தரைப்பாலம் உயர்மட்ட மேம்பாலமாக இல்லாததாலும், போதிய அகலம் ஏதுமின்றி இருப்பதாலும் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க வழியின்றி உயரமான தடுப்புச்சுவர் இல்லாத நிலையில் நொய்யல் ஆற்றின் உள்ளே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு விடும் அபாயத்துடனும், அச்ச உணர்வுடனும் சென்று வருகின்றன.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story