உடுமலை பகுதியில் பொரி உற்பத்தி தீவிரம்


உடுமலை பகுதியில் பொரி உற்பத்தி தீவிரம்
x
தினத்தந்தி 9 Oct 2021 1:10 AM IST (Updated: 9 Oct 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதபூஜையை முன்னிட்டு உடுமலை பகுதியில் பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நலிவடைந்து வரும் தொழிலை மீட்டெடுக்க உதவுமாறும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி
ஆயுதபூஜையை முன்னிட்டு உடுமலை பகுதியில் பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நலிவடைந்து வரும் தொழிலை மீட்டெடுக்க உதவுமாறும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொரி உற்பத்தி 
உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம், கொமரலிங்கம், கொழுமம், பாப்பன்குளம் உள்ளிட்ட பகுதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை யொட்டி பொரி உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இது குறித்து பொாி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
பொரி தயாரிக்க பயன்படும் அரிசியை கொல்கத்தா மற்றும் கர்நாடகாவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்கிறோம். கடந்தாண்டு ஒரு கிலோ அரிசி ரூ.25-க்கு கிடைத்தது. தற்போது கொள்முதல் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கிலோ 35 ரூபாயாக உயர்ந்து விட்டது. 
அரிசியை முதலில் தண்ணீரில் ஊற வைத்து பின்பு சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். பின்பு அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப தகுந்த அளவில் சேர்த்து சில மணி நேர பக்குவம் செய்ய வேண்டும். பின்னர் அரிசியை பொரி உற்பத்தி செய்யும் எந்திரத்தில் கொட்டி 2 மணி நேரத்துக்கும் மேல் வேக வைத்தால் சுவைமிகுந்த பொரி உற்பத்தியாகிறது. இதை மூட்டைகளில் சேகரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம்.
குறைந்த அளவு லாபம்
பொரியை படி மற்றும் பக்கா அளவில் கொடுக்கிறோம். 55 பக்கா கொண்ட ஓரு முட்டை பொரி கடந்த ஆண்டு 350 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருப்பினும் பொரி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆட்கூலியும் உயர்ந்து இருப்பதால் பொரி உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைந்த அளவு கிடைக்கிறது. மேலும் உடுமலை நகராட்சி ஏரிப்பாளையம் பகுதியில் மட்டும்  60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொரி உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பல்வேறு இடர்பாடுகளால் காலப்போக்கில் தொழில் நலிவடைந்து விட்டது. அதைத்தொடர்ந்து பொரி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதியில் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் பொரி உற்பத்தியில் குறைந்த அளவு குடும்பத்தினரே ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரணம்
எனவே நலிவடைந்து வரும் பொரி உற்பத்தி தொழிலை மேம்படுத்தவும் அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படவும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story