மனைவி உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டியவர் கைது
திருப்பூரில் மனைவி உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய கோவை இரும்பு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் மனைவி உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய கோவை இரும்பு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இரும்புக்கடை உரிமையாளர்
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 47). இவருடைய மனைவி திவ்யா (27). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். பவுன்ராஜ் கோவையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திவ்யா அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு திருப்பூரில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து திவ்யா திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த கிருஷ்ணா வீதியில் உள்ள சித்தி வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பவுன்ராஜ் நேற்று திவ்யாவின் உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த திவ்யாவுக்கும் பவுன்ராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பவுன்ராஜ் தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த அரிவாளால் திவ்யாவை சரமாரியாக வெட்டினார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
கைது
அவருடைய சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த திவ்யாவின் சித்தி மகனான 17 வயது சிறுவன் தடுக்க முயன்றுள்ளான். திவ்யா மீது இருந்த ஆத்திரத்தில் பவுன்ராஜ் அந்த சிறுவனையும் பல இடங்களில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த திவ்யா மற்றும் சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் போயம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த பவுன்ராஜை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story