பெரியாண்டவர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைப்பு
பெரியாண்டவர் கோவிலில் 13 சாமி சிலைகளை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
சித்தர்கள் கோவில்
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் புகுந்து சுடுகளிமண்ணால் ஆன பெரியசாமி, செல்லியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளையும், செங்கமலையார் கோவிலில் உள்ள சுடுகளிமண்ணால் ஆன சாமி சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுவாச்சூர் அம்பாள் நகரில் உள்ள சித்தர்கள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு பூசாரி ராஜா (வயது 57) என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று சத்தம் கேட்டு எழுந்த அவர், அங்கு பார்த்தபோது மர்மநபர் ஒருவர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்டு வரும் 12 அடி உயர முருகன் சிலையின் மயில் வாகனத்தில் கொண்டையை உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் குதிரை வாகனமும் உடைக்கப்பட்டிருந்தது.
சிக்கினார்
இதையடுத்து ராஜா சத்தம் போட்டதால், அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகன் (48) என்பவரும் எழுந்து ஓடி வந்தார். இதனை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து ராஜாவும், அன்பழகனும் ஓடினர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர்களால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது கோவில் அருகே ஒரு பை கிடந்தது. இந்நிலையில் அந்த பையை எடுக்க அந்த நபர் வந்தார். அப்போது மறைந்திருந்த ராஜாவும், அன்பழகனும் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து அந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணனின் மகன் நடராஜன் என்ற நாதன் (42) என்பதும், தற்போது சென்னை எம்.ஜி.ஆர். நகர், பம்மல் நல்லதம்பி தெருவில் வசித்து வந்ததும் தெரியவந்தது. முதுகலை பட்டதாரியான நாதன் வைத்திருந்த பையில் நிறைய தகடுகள் இருந்தன.
சிலைகள் உடைப்பு
இதற்கிடையே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடிமக்கள் வழிபாட்டு தெய்வமான பெரியாண்டவர் கோவில் புதுப்பிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பெரியாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கற்சிலைகள் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 16-ந்தேதி தான் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை மண்டல பூஜைக்காக அந்த கோவிலை சேர்ந்த குடிமக்கள் வந்தபோது, அந்த கோவிலில் குதிரை வாகனத்தின் மீது அமர்ந்த தோற்றத்தில் இருந்த பெரியாண்டவர், விநாயகர், பெரியநாயகி, எல்லையம்மன், ேபச்சியாயி, காத்தவராயன் ஆகிய சாமி சிலைகள் மற்றும் 7 சப்த கன்னிமார்கள் சிலைகள் என 13 சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த சாமி சிலைகள் அமைக்கப்பட்டபோது வைக்கப்பட்ட மருந்து தடவிய தகடுகளும் திருட்டு போயிருந்தன.
சாலை மறியல்
இதையடுத்து சிறுவாச்சூரில் தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களை கண்டித்தும், அதில் ஈடுபடும் மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெரியாண்டவர் கோவில் பக்தர்களும், சிறுவாச்சூர் பொதுமக்களும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, சித்தர்கள் கோவிலில் சிலையை உடைத்து பிடிபட்ட நாதனிடம் நடத்திய விசாரணையில், அவர்தான் பெரியாண்டவர் கோவிலில் சிலைகளை உடைத்ததும், அதில் இருந்த தகடுகளை திருடியதும் தெரியவந்ததாக போலீசார், போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். மறியலால் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் பெரியாண்டவர் கோவிலையும், சித்தர்கள் கோவிலையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நெடுஞ்சாலையோரத்தில் ஒரே கோவிலில் 13 சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story