கடை ஊழியரை வீட்டிற்கு வரவழைத்து மோசடி: நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்த அந்தமானை சேர்ந்தவர் கைது
அண்ணாநகர் நகைக்கடை ஊழியரை வீட்டிற்கு வரவழைத்து நூதன முறையில் மோசடி செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிய அந்தமானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
அண்ணா நகரில் இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் தான் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அங்கத் மேத்தா என்றும், தான் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் தங்கி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தனக்கு வளையல், செயின், கம்மல் உள்ளிட்ட நகைகள் வேண்டும் என்றும், மேலும் நகைகளை வீட்டுக்கு கொடுத்து அனுப்பினால் பணத்தை ஊழியரிடமோ அல்லது ஆன்லைனிலோ செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய நகைக்கடை மேலாளர் ஊழியரான இம்தியாஸ் என்பவரிடம் வளையல், சங்கிலி, கம்மல் ஆகிய நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் அந்த நபர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற ஊழியர் நகைகளை காண்பித்துள்ளார். அப்போது அங்கத் மேத்தா என்று கூறிய அந்த நபர் வளையல், சங்கிலி, கம்மல் ஆகிய 9 பவுன் நகைகளை பக்கத்து அறையில் இருக்கும் தனது மனைவிடம் நகையை காண்பித்து விட்டு வருவதாக கூறி ஊழியரிடம் இருந்து நகைகளை வாங்கி சென்றவர் மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை ஊழியர் அங்கிருந்த நபர்களிடம் விசாரித்த போது, தனியார் விடுதியை தனது வீடு என்று கூறி நூதன முறையில் நகைகளை அந்த நபர் கொள்ளைடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகைக்கடை நிர்வாகம் சார்பில் ராயலாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அந்த நபரின் அடையாளங்களை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அங்கத் மேத்தாவை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அங்கத் மேத்தா என்பது அவரது உண்மையான பெயர் இல்லை என்றும் சர்தாக் ராவ் பாப்ராஸ் (43), என்பது தான் அவரது உண்மையான பெயர் என தெரியவந்தது.
குடும்பத்துடன் அந்தமானில் வசித்து வரும் இவர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டல்களில் தனியாக அறை எடுத்து தங்கி பிரபல நகை கடைகளில் ஆன்லைனில் தங்க நகைகளை ஆர்டர் செய்வார். அதனை ஊழியர்கள் கொண்டு வரும்போது தனது மனைவியிடம் நகைகளை காண்பித்து விட்டு வருவதாக கூறி ஊழியர்களை ஏமாற்றி எடுத்து சென்று நகைகளை விற்று உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவரிடமிருந்து 7½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இவர் இதே போல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story