‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர், வடக்கு விஜயநாராயணம் முதல் தெற்கு விஜயநாராயணம் வரையும், காரியாண்டி முதல் இட்டமொழி வரையும் சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள முள்மரங்கள் வளர்ந்து வெட்டப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக முள்செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
சாலை சீரமைக்கப்படுமா?
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தனியார் மருத்துவமனை விலக்கில் இருந்து சுவாமி நெல்லையப்பர் ஹைரோட்டில் இணைவது வரையுள்ள சாலை குண்டும்-குழியுமாக மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது. ஆகையால் அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
வெங்கடேஷ், மீனாட்சிபுரம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
நெல்லை தச்சநல்லூரில் மதுரை மெயின் ரோட்டில் பங்களா நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளிக்கூடம் அருகே ரோட்டின் கீழ்புறமும், மேல்புறமும் வேகத்தடைகள் அமைப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுப்பிரமணியன், தச்சநல்லூர்.
படித்துறை சரிசெய்யப்படுமா?
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சின்ன சங்கரன்கோவில் உள்ளது. இங்கு கோவில் மற்றும் ஆற்றில் குளிப்பதற்கு வசதியாக படித்துறை ஒன்றும் உள்ளது. கடந்த வருடம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படித்துறை சேதம் அடைந்தது. மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டாகியதால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் தூய்மை பணிகள் சரியாக நடைபெறுவது இல்லை. இதனால் கோவிலை சுற்றியும், ஆற்றின் கரையோரத்திலும் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே, குப்பைகளை அகற்றிடவும், படித்துறையை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விக்னேஷ், சிவந்திபுரம்.
குண்டும் குழியுமான ரதவீதி
தென்காசி மாவட்ட தலைநகரம் ஆகி ஒரு வருடத்தை கடந்து விட்டது. ஆனால், காசி விசுவநாதர் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகள் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. எனவே, ரதவீதிகளை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீத்தாரப்பன், மேலகரம்.
கோவில் புனரமைக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் மிகவும் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. தற்போது இக்கோவில் வளாகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் இக்கோவில் சுற்றுச்சுவர்கள் சிதிலம் அடைந்து காணப்படுவதால் சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புனரமைப்பு செய்து பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு நடத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பூ.இசக்கித்துரை, குலசேகரப்பட்டி.
கிளை நூலகம் அமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு திரேஸ்புரத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் அரசு பணிக்கான போட்டித் தே்ாவுகளில் பங்கு பெற்று பயனடையும் வகையில் கிளை நூலகம் ஒன்று அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மு.சம்சுகனி, திரேஸ்புரம்.
குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள்
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பகுதியில் உள்ள சில வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே, இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்மானுவேல், முடிவைத்தானேந்தல்.
மோசமான சாலை
திருச்செந்தூர்- நெல்லை பிரதான சாலையில் உள்ள காந்திபுரம் முதல் ராணிமகாராஜபுரம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இடதுபுறமாக செல்ல வேண்டிய வாகனங்கள், வலதுபுறமாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மகேஷ், நத்தகுளம்.
---------------
Related Tags :
Next Story