தேனி மாவட்டத்தில் அமைதியாக நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்
தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.
தேனி :
தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 9 பதவிகள் காலியாக இருந்தன. இதில் பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வீதம் மட்டுமே போட்டியிட்டனர். இதனால், அந்த 4 பதவிகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய 19-வது வார்டு கவுன்சிலர், கடமலை-மயிலை ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ராஜதானி, நாகலாபுரம் ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் என மொத்தம் 5 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த 5 பதவிகளுக்கு மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
மொத்தம் 22 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. காலையில் இருந்தே மக்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமும், மற்ற பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடந்தது. இடைத்தேர்தல் நடந்த பகுதிகளில் 5 ஆயிரத்து 960 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 6 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 11 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர்.
காலை 9 மணியளவில் 16.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. பகல் 11 மணியளவில் 36.97 சதவீதம் வாக்குகளும், பகல் 1 மணியளவில் 55.14 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.23 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 70.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. நரியூத்து, முத்தாலம்பாறை, தெப்பம்பட்டி, ராஜக்காள்பட்டி, வீருசின்னம்மாள்புரம், கதிர்நரசிங்கபுரம் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முரளிதரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் தங்கள் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story