தேனி பகுதியில் தொடர் திருட்டு, நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 18½ பவுன் நகைகள் பறிமுதல்
தேனி பகுதியில் தொடர் திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி :
தேனி பென்னிகுவிக் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய வீட்டில் கடந்த மாதம் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு போனது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுபோல அல்லிநகரம், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு மற்றும் தேனி என்.ஆர்.டி. சாலையில் 2 நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த தனிப்படையினர் சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராம்குமார் வீட்டில் திருடியது அன்னஞ்சியை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணன் (வயது 35), தேனி பங்களாமேட்டை சேர்ந்த செந்தில்குமார் (46) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் சேர்ந்து தேனி என்.ஆர்.டி. நகரில் மோட்டார்சைக்கிளில் சென்று 2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதையும், வீரபாண்டி அருகே ஸ்ரீரெங்கபுரம், அல்லிநகரம் ஆகிய இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 18½ பவுன் நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான ராஜேஷ் கண்ணன் சமையல் தொழிலாளி ஆவார். செந்தில்குமார் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வருகிறார். டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்ற போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராட்டு
இதனிடையே தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படையில் இடம்பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், ஏட்டுகள் கணேசன், மகேஸ்வரன், விஜய் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.
Related Tags :
Next Story