லோயர்கேம்ப்- மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம் இரு மாவட்ட மக்களிடையே பகையை உருவாக்க வேண்டாம் கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


லோயர்கேம்ப்- மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம்  இரு மாவட்ட மக்களிடையே பகையை உருவாக்க வேண்டாம்  கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:25 PM IST (Updated: 9 Oct 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில், “இரு மாவட்ட மக்களிடையே பகையை உருவாக்க வேண்டாம்” என்று கூறி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.


உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக  தமிழக அரசு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
கருத்துகேட்பு கூட்டம்
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்ற கருத்துகேட்பு கூட்டம் நேற்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். தாசில்தார் அர்ஜுனன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், 5 மாவட்ட விவசாய சங்க முன்னாள் தலைவர் அப்பாஸ், வக்கீல் முத்துராமலிங்கம், செங்குட்டுவன் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி பேசுகையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல பணிகள் நடைபெறுகிறது என்றார். 
விவசாயிகள் எதிர்ப்பு
இதற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-
லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதற்கு முன்பே விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்டு இருக்க ேவண்டும். அதை விட்டுவிட்டு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கிய பிறகு கருத்து கேட்பது என்பது ஏமாற்று வேலையாகும். மதுரை மாவட்ட மக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள். அவர்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல எங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரத்தில் குடிநீர் கொண்டு செல்லும் முறை மாற்றப்பட வேண்டும். அதாவது முல்லைப்பெரியாறு, வைகை ஆறு மற்றும் நீரோடைகள் மூலம் வைகை அணைக்கு தண்ணீர் வருகிறது. எனவே வைகை அணையை முழுமையாக தூர்வாரி அங்கு போதுமான அளவு தண்ணீரை தேக்க வேண்டும். அங்கிருந்து மதுரை மக்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு தண்ணீரை ஆறுவழியாக எடுத்து கொள்ளட்டும்.
பாதிக்கப்படும்
ஆனால் லோயர்கேம்ப்பில் இருந்து நேரடியாக ராட்சத குழாய் மூலம் தினமும் 100 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும். கோடை காலத்தில் ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கேரள அரசிடம் இருந்து அணையை காக்க தேனி மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டோம். அணையை காக்க 4-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தீக்குளித்து மடிந்தார்கள். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுடன் சேர்ந்து விவசாயிகளும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். 
மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க தேனி மாவட்ட மக்கள் மறுத்து வருகிறார்கள் என்று தவறான பிரசாரத்தை அதிகாரிகள் செய்ய வேண்டாம். எங்களுக்கும், மதுரை மக்களுக்கும் பகையை உண்டாக்காதீர்கள. இவ்வாறு விவசாயிகள் பேசினர். 
ஆர்ப்பாட்டம்
அப்போது அதிகாரிகள், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறினர். இதையடுத்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
பின்னர் விவசாயிகள், அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புத்துண்டு அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story