வேலூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்


வேலூரில்  குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Oct 2021 10:54 PM IST (Updated: 9 Oct 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

துர்நாற்றம்

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி மூலம் சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
அந்த குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கருப்பு நிறத்தில் இருந்தது. மேலும் அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியின் மேல் சென்று பார்த்தனர். அப்போது அதனுள் குப்பைகள் மிதந்து சாக்கடை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

சாலைமறியல்

ஆத்திரமடைந்த ராமர் பஜனை கோவில் தெரு, நைனியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாலை 4.30 மணி அளவில் வேலூர் ஆற்காடு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.

தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 
2-ம் மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் அங்கு வந்து குடிநீர் தொட்டியை பார்வையிட்டு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். முன்னதாக மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெண்கள் சிலர் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடத்தில் கொண்டு வந்து சாலையில் கொட்டி தங்கள் பிரச்சினையை நூதன முறையில் வெளிக்காட்டினர்.

Next Story