கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு
கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாலைஅகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைஅகரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த அவர், வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் வாக்குப்பதிவு விரைவாக நடைபெற உரிய ஏற்பாடு செய்யும்படியும் கலெக்டர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைதியான முறையில்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக கடந்த 6-ந் தேதியன்று முகையூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், வானூர், செஞ்சி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் அமைதியான முறையில் நடைபெற்றது. இன்றைய தினம் (நேற்று) 2-ம் கட்டமாக காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், வல்லம், மேல்மலையனூர் ஆகிய 6 ஒன்றியங்களில் 2,800 பதவியிடங்களுக்கு 1,379 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக தடுப்புக்கட்டைகள் ஏற்படுத்தி சமூக இடைவெளியில் வரிசையில் நின்று சுலபமாக வாக்கினை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாகவும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story