நாகையில் தயாராகும் விசைப்படகுகளுக்கு தனி மவுசு
நாகையில் படகு கட்டும் தொழிலில், தொழிலாளர்கள் அசத்தி வருகின்றனர். இங்கு தயாராகும் விசைப்படகுகளுக்கு தனி மவுசு உள்ளதால் வெளிமாநிலத்தில் இருந்து அதிக அளவில் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்;
நாகையில் படகு கட்டும் தொழிலில், தொழிலாளர்கள் அசத்தி வருகின்றனர். இங்கு தயாராகும் விசைப்படகுகளுக்கு தனி மவுசு உள்ளதால் வெளிமாநிலத்தில் இருந்து அதிக அளவில் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
கடல் மார்க்கமாக போர்
சோழ மன்னர்கள் ஆட்சிக்காலம் முதல் நாகையில் படகு கட்டும் தொழில் நடந்து வருகிறது. அப்போதைய கால கட்டத்தில் கடல் மார்க்கமாக போரில் ஈடுபட இங்கு தோணி தயார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலப்போக்கில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக கட்டுமரங்கள் தயார் செய்யப்பட்டன. இதில் இருந்து மேலும் நவீனமாக மரத்தாலான விசைப்படகுகளை உருவாக்க தொடங்கினர்.
சுனாமிக்கு பிறகு தற்போது இரும்பிலான விசைப்படகுகள் பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மரப்படகுகளை விட இரும்பு படகுகள் உறுதியாகவும், தரமாகவும் தயாரிக்கப்படுவதால், பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி கடலில் மிதக்கின்றன.
கம்பீரமாக சீறிப்பாயும்
கடலில் கம்பீரமாக சீறிப்பாயும் மீன்பிடி படகுகளை சாதாரணமாக கட்டிவிட முடியாது. திறமையும், தொழில் நேர்த்தியும் இருந்தால் மட்டுமே தயார் செய்யமுடியும். அந்த வகையில் நாகையில் கைதேர்ந்த தச்சு கலைஞர்கள், தனி கவனம் செலுத்தி படகுகளை வடிவமைத்து வருகின்றனர். குதிரைவண்டிக்கு அச்சாணிபோல, மீனவர்களின் பட்டறிவும் படகுகள் கட்டுவதற்கு கைகொடுக்கிறது.
நாகை படகு கட்டுமான தளத்தில் பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள், வர்ணம் பூசுதல், என்ஜின் பராமரிப்பு என 24 மணிநேரமும் பணிகள் நடந்துகொண்டே இருக்கும். இங்கு கட்டப்படும் விசைப்படகுகள் தரமாகவும், உறுதியாகவும் உள்ளதால் கடல் சீற்றத்தையும் தாங்கி தாக்குப்பிடிக்கும்.
மவுசு அதிகம்
நாகையில் தயார் செய்யப்படும் விசைப்படகுகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. நாகையில் படகு கட்டும் பணியில் அசத்தி வரும் தொழிலாளர்கள் தயாரிக்கும் படகுகளை தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். கரைமடி படகு, கமர்சியல் படகு மற்றும் ஆழ்கடல் தொழில் செய்யும் படகுகளான செவில்வலை படகு, பார்சின் வகை படகு உள்ளிட்ட வகைகளில் விசைப்படகுகள் தயாரிக்கப்படுகிறது.
78 அடி நீளம் வரை விசைப்படகுகள் உருவாக்கப்படுகிறது. ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை படகுகள் தயார் செய்யப்படுகிறது. அத்துமீறி மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களை, படகுடன் இந்திய கடற்படையினர் கைது செய்கின்றனர். அந்த படகுகள் நீண்ட நாட்களாக நாகையில் நிறுத்தி வைக்கப்படும். அதை திரும்ப ஒப்படைக்கும்போது அந்த படகுகளுக்கு இங்குதான் மராமத்து பணிகள் நடக்கிறது.
வங்கி கடன் உதவி
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் தடையின்றி வங்கி கடன் உதவிகளை வழங்கினால், அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித்தரும் மீன்பிடி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம் என நாகை விசைப்படகு தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story