15 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாமக்கல் மாவட்டத்தில் 83.9 சதவீத வாக்குப்பதிவு-விறுவிறுப்பாக நடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 15 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் 83.9 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி உள்பட மொத்தம் 25 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட 10 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவி, எருமப்பட்டி ஒன்றியக்குழு 15-வது வார்டு உறுப்பினர் பதவி, 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி, 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி என மொத்தம் 15 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு 63 பேர் போட்டியிட்டனர்.
போதமலை
இதையொட்டி 141 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம் வாகனங்கள் மூலம் ஓட்டுப்பெட்டிகள், வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் மற்றும் கையுறை, முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டன.
ராசிபுரம் அருகே போதமலையில் அமைக்கப்பட்டிருந்த மேலூர், கீழூர் மற்றும் கெடமலை வாக்குச்சாவடிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் 8 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுப்பெட்டிகள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன. இந்த பணியில் 24 பேர் அடங்கிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 141 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி காலை முதலே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.
காலை 9 மணி நிலவரப்படி 16 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 37 சதவீத வாக்குகளும், 1 மணி நிலவரப்படி 59 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
83.9 சதவீத வாக்குகள்
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கோப்பணம்பாளையம் ஊராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் அலுவலர்கள் ஓட்டுப்பெட்டிகளை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இறுதி கட்ட நிலவரப்படி மொத்தம் உள்ள 67 ஆயிரத்து 720 வாக்காளர்களில் 27 ஆயிரத்து 741 ஆண்கள், 29 ஆயிரத்து 129 பெண்கள் என மொத்தம் 56 ஆயிரத்து 870 பேர் வாக்களித்து இருந்தனர். இது 83.9 சதவீத வாக்குப்பதிவு என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குப்பதிவுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
எம்.பி.க்கள்
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் (வெண்ணந்தூர் ஒன்றியம்) பதவிக்கு நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையொட்டி 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் 16 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வாக்களித்தார்.
இதேபோல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்காக அத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் வாக்களித்தார்.
எம்.எல்.ஏ.
கபிலர்மலை ஒன்றியம் கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலையொட்டி உரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதலே அந்த பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதேபோல் சேகர் எம்.எல்.ஏ.வும் தனது வாக்கினை செலுத்தினார்.
இந்த வாக்குகள் வருகிற 12-ந் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story