திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 78.26 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 78.26 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல்
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6-ந்தேதி முதல் கட்டமாகவும், நேற்று 2-வது கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதுமட்டுமின்றி 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 வார்டு உறுப்பினர் பதவிகள், 11 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், 52 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 66 பதவிகள் காலியாக இருந்தது. இதில், 5 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 26 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்
மேலும் தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள பூனம்பாடி ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
மீதமுள்ள 3 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 25 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 34 பதவிகளுக்கு நேற்று 77 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினர். தேர்தல் பணியில் 308 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
78.26 சதவீதம்
தேர்தல் நடைபெறும் பதவிகளுக்கு உட்பட்ட பகுதியில் 15 ஆயிரத்து 538 ஆண் வாக்காளர்கள், 16 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு 3-ம் பாலினத்தவர் என மொத்தம் 31 ஆயிரத்து 553 பேர் உள்ளனர். இதில் 24 ஆயிரத்து 693 பேர் வாக்களித்து உள்ளனர். இது 78.26 சதவீதம் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story