இடைதேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்


இடைதேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 10 Oct 2021 12:23 AM IST (Updated: 10 Oct 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இடைதேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

காங்கேயம்
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இடைதேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு 
காங்கேயம், வெள்ளகோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய மாவட்ட  10-வார்டு உறுப்பினர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் என மொத்தம் 7 பேர் களத்தில் உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து முககவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். இதை தொடர்ந்து காங்கேயம் அருகே உள்ள பொத்தியபாளையம், வீரணம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை  மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காங்கேயம் தாசில்தார் சிவகாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஒன்றியத்தில்   மேட்டுப்பாளையம், வேலம்பாளையம், வள்ளியரச்சல், வீரசோழபுரம்  பகுதியான 1-வது மண்டலத்தில்  9 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அது போல் மண்டலம் 2-ல் 12 வாக்குச்சாவடிகளிலும், மண்டலம் 3-ல் 12 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 33 வாக்குச்சாவடி மையங்களில்  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
 மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச் சாவடிக்கு வந்த  வாக்காளர்களுக்கு  வெப்பமானி வைத்து பரிசோதனை செய்தும், கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே  வாக்குப் பதிவுக்கு வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 

முத்தூர்
திருப்பூர் மாவட்ட 10-வது வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு முத்தூர் பகுதி கிராம ஊராட்சிகளில்அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. இப்பகுதிகளில் வாக்குப்பதிவு பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 வாக்கு சாவடி மையங்களை போலீஸ் சூப்பிரண்டு சாசாங் சாய் பார்வையிட்டு பாதுகாப்பு நிலவரம் மற்றும் வாக்குப்பதிவு நிலவரங்களை கேட்டறிந்தார். வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் 1, 2, 3 என மொத்தம் 33 வாக்குச்சாவடிகளில் 133 பேர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 இப்பகுதிகளில்  நேற்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story