15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்


15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்
x
தினத்தந்தி 10 Oct 2021 12:27 AM IST (Updated: 10 Oct 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான பெண்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர்.

காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான பெண்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர்.
உள்ளாட்சி பதவிக்கான வாக்கு பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நேற்று சிவகங்கை, காளையார்கோவில், கண்ணங்குடி பகுதியில் நடைபெற்றது. இதில் சிவகங்கை அருகே மேலப்பூங்குடி,ஒக்குபட்டி ஆகிய பகுதியில் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், இதேபோல் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள புலியடிதம்மம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி உள்பட 10 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. அதிகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவையொட்டி ஏராளமான கிராமமக்கள் ஓட்டு போட வாக்கு பதிவு மையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் முக கவசம் மற்றும் கையுறை வழங்கி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் வாக்குப்பதிவு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த பாதுகாப்பு
மேலும் 100 நாட்கள் திட்டத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் ஏராளமானோர் நேற்று அதிகாலை முதல் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தனர். மேலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். சில வாக்கு பதிவு மையங்களில் காலை முதல் மதியம் 11 மணி வரை போதிய அளவில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே 200 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வருவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்த வாகனத்தை மற்றும் வாக்குச்சாவடி மையம் வரை அனுமதி வழங்கினர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story