25 உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் நடந்தது
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் மன்னார்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு எண்-11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-18, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளிவாரமங்கலம், மணவாளநல்லூர், விஸ்வநாதபுரம், மூவாநல்லூர், என 4 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள் 18 என காலியாக உள்ள 25 பதவியிடங்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவுற்றது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையுறை, முகக்கவசம் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 136 வாக்குச்சாவடிகளுக்கு 669 அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
39 வாக்கு சாவடிகள் பதற்றமானவை
இதில் 39 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் போலீசார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திடீர் ஆய்வு செய்தனர்.
திருவாரூர் ஒன்றியம் பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கீழகாவாதுகுடி 4 வார்டு உறுப்பினர் ஆகிய 2 காலி பணியிடங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குசாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் அமைதியான முறையில் நடைபெறும் வாக்குப்பதிவினை ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் உரிய போலீஸ் பாதுகாப்போடு திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து வருகிற 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story