கிணற்றில் விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி இறந்தார்
மங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த அவரது அண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்கலம்
மங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த அவரது அண்ணனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணற்றில் விழுந்த பெண்
திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த சாமளாபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட சகுந்தலா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக சகுந்தலாவுக்கு மனநிலை பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சகுந்தலாவை தேவராயம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சின்னத்துரை கொண்டு போய் விட்டார்.
100 அடி ஆழ கிணறு
இந்த நிலையில் சின்னத்துரை நேற்று தேவராயம்பாளையம் சென்று சகுந்தலாவை அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு இருவரும் தேவராயம்பாளையம் வந்தனர். பின்னர் சகுந்தலாவை தேவராயம்பாளையத்தில் விட்டுவிட்டு சின்னத்துரை சாமாளபுரம் வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை தேவராயம்பாளையம் பகுதியில் அவர்களின் வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் சகுந்தலா விழுந்தார். இதை வீட்டில் இருந்து பார்த்த அவரது அண்ணன் சுந்தரம் (45) பதறி துடித்து ஓடோடி சென்று தங்கையை காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்தார். 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அதன் பின்னர் நீண்டநேரமாகியும் இருவரும் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை.
அண்ணனும் பலி
இதற்கிடையில் கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருகிறதே என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து கிணற்றை பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சுந்தரமும், சகுந்தலாவும் தத்தளித்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து பல்லடம்தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ரவிசந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்களும், போலீசாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி சகுந்தலா இறந்து விட்டார். இதனால் அவருடைய உடல் தண்ணீரில் மிதந்தது. இதையடுத்து சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுந்தரத்தை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். மாலை 6 மணிவரை தேடியும் சுந்தரத்தின் உடலை மீட்க முடியவில்லை. அதற்குள் இரவுநேரமாகி விட்டதால் சுந்தரத்தின் உடலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவருடைய உடலை தேடும் பணியை தீயணைப்பு படை வீரர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ள உள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்து இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story