தங்கம் போல கிடுகிடுவென உயரும் தக்காளி விலை


தங்கம் போல கிடுகிடுவென உயரும் தக்காளி விலை
x
தினத்தந்தி 10 Oct 2021 1:51 AM IST (Updated: 10 Oct 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.45-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:
மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.45-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்காலிக மார்க்கெட்
தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம்.
தக்காளி விலை அதிகரிப்பு
தஞ்சை மார்க்கெட்டிற்கு தக்காளி ஆந்திரா, ஓசூர், உடுமலைப்பேட்டை, கர்நாடகம், பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரு நாளைக்கு 50 டன் வரை விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பல்லாரி கிலோ ரூ.45-க்கு விற்பனை
இதே போல் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. தற்போது மழை காரணமாக பல்லாரி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வெங்காயம் வரத்து குறைவாக இருந்ததாலும் தரமானதாக இல்லை. இதனால் பழைய வெங்காயத்தின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பல்லாரி ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி மற்றும் பல்லாரி விலை அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விலையேற்ற காரணமாக விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வரத்து பாதியாக குறைந்தது
இது குறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகையில், தஞ்சை மார்க்கெட்டிற்கு தினமும் 50 டன் தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது விளைச்சல் இல்லாததால் பாதியாக குறைந்து 25 டன் விற்பனைக்கு வருகிறது. அதுவும் முற்றிலும் பழங்களாக இல்லாமல் காயாகவும் விற்பனைக்கு வருகிறது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டியில் 10 கிலோவுக்குமேல் தக்காளி காயாகத்தான் உள்ளது. நன்றாக பழுத்த பழங்களும் மழையினால் சேதம் அடைந்துகாணப்படுகிறது.
இதே போல் வெங்காயம் 60 டன் விற்பனைக்கு வந்த இடத்தில் தற்போது 40 டன்னுக்கும் குறைவாக விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்ததால் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தக்காளியின் விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வினால் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்களும் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே தக்காளி மற்றும் பல்லாரி போன்றவற்றை வாங்கிசெல்கிறார்கள்.என்றனர்.

Next Story