தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் வாழக்காய்பட்டி பிரிவில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமன், வாழக்காய்பட்டி.
சேதமடைந்த மதகுகள்
பட்டிவீரன்பட்டி அருகே தாமரைக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடுவதற்காக 5-க்கும் மேற்பட்ட மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த மதகுகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. மதகுகள் சேதமடைந்து இருப்பதால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறியபடியே உள்ளது. எனவே மதகுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, தாமரைக்குளம்.
தரைப்பாலம் அமைக்கும் பணி தாமதம்
ஆயக்குடியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் பழைய ஆயக்குடியில் 2 இடங்களிலும், போலீஸ் நிலையம் அருகே, பேரூராட்சி அலுவலகம், சந்தை அருகில் ஆகிய இடங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக சாலையின் குறுக்காக குழிகள் தோண்டப்பட்டு பாலத்துக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தரைப்பால பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ், ஆயக்குடி.
பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
பழனி படிப்பாறை காளியம்மன் கோவில் தெரு பகுதியில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித்திரியும் பன்றிகள் அங்குள்ள சாக்கடை கால்வாய்க்குள் புரண்டு எழுந்து வந்து வீடுகள் முன்பு நிற்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே பன்றிகளை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகமது, பழனி.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
தேனி அல்லிநகரம் 12-வது வார்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் காந்திநகரில் உள்ள காலியிடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குவியல், குவியலாக குப்பைகள் கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளிச்சென்று குப்பை கிடங்கில் கொட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், காந்திநகர்.
Related Tags :
Next Story