மிரட்டி பணம் பறித்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக பரம்பீர் சிங் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீசார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 Oct 2021 2:05 AM IST (Updated: 10 Oct 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

மிரட்டி பணம் பறித்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக பரம்பீர் சிங் வீட்டு வாசலில் மும்பை போலீஸ் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

மும்பை, 
மிரட்டி பணம் பறித்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக பரம்பீர் சிங் வீட்டு வாசலில் மும்பை போலீஸ் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
மிரட்டி பணம் பறிப்பு
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், கார் வெடிகுண்டு வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி ஊழல் புகாரை தெரிவித்தார். இந்த புகாரால் அனில்தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் பரம்பீர் சிங்கிற்கு எதிராக போலீசில் அடுக்கடுக்காக புகார்கள் வந்தது. 
இதில் கோரேகாவ் போலீசில் கட்டுமான அதிபரும், ஓட்டல் அதிபருமான பிமல் அகர்வால் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இந்த புகாரின்படி மிரட்டி பணம் பறித்ததாக பரம்பீர் சிங், சச்சின்வாசே உள்ளிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நோட்டீஸ்
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்க போலீசார் மலபார்ஹில் பகுதியில் உள்ள பரம்பீர் சிங்கின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாளை மறுநாள் (12-ந் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசை பரம்பீர் சிங் வீட்டு வாசலில் ஒட்டினர். 
சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு பயந்து பரம்பீர் சிங் வெளிநாடு தப்பியிருக்கலாம் என மாநில உள்துறை மந்திரி திலீப்வால்சே பாட்டீல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story