டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி
இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2½ லட்சம் தப்பியது.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2½ லட்சம் தப்பியது.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டாஸ்மாக் கடை
குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் அருகே வலியஏலா பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மைக்கேல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்த மைக்கேல்ராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
சுவரில் துளை
இந்தநிலையில் நேற்று காலையில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
ரூ.2½ லட்சம் தப்பியது
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், அது முடியாததால் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், லாக்கரை உடைக்க முடியவில்லை. இதில், ஏமாற்றமடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
நேற்றுமுன்தினம் மதுவிற்பனையான பணம் ரூ.2½ லட்சத்ைத லாக்கரில் மைக்கேல்ராஜ் வைத்துள்ளார். அந்த லாக்கரை மர்மநபர்கள் உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது.
பரபரப்பு
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரிக்கப்பட்டது. அதே சமயத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் துளையிட்டு மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story