கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்


கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2021 3:11 AM IST (Updated: 10 Oct 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்:

சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், சின்னநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி கறவை மாடுகள் வளர்ப்போரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் வகையில் பெரியநாகலூர் கிராமத்தில் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் அரியலூரில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் அந்த கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் நிலைய முகவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று அரியலூருக்கு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களை அலுவலகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண பட்டுவாடா
அப்போது அவர் கூறுகையில், பெரியநாகலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக பணம் பட்டுவாடா செய்யவில்லை. பாலை முழுமையாக கொள்முதல் செய்வதில்லை. பால் கொள்முதல் செய்யாததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் கறவை மாடுகளின் தீவனத்திற்கு கூட வருமானம் போதவில்லை. மேலும் சரியாக பணம் பட்டுவாடா செய்யாததால், முகவரை மாற்ற வேண்டும், என்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முக்கிய நபர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story