உள்ளாட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்ட வாக்காளர்கள்


உள்ளாட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்ட வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Oct 2021 3:11 AM IST (Updated: 10 Oct 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.

அரியலூர்:

போட்டியின்றி தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நேற்று உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இதில் 4 ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேரும், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர்.
மேலும் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டக்கோவில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், கோவிலூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சிறுகடம்பூர் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ.தத்தனூர் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், இலையூர் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 11 வேட்பாளர்களும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு
அந்த பதவிகளுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தற்செயலில் தேர்தலில் வாக்களிக்க மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 332 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு முககவசம் அணிந்து ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றனர்.
முன்னதாக அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும், வலது கைக்கு கையுறையும் வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது. வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதனை பயன்படுத்தி வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். முன்னதாக வாக்களித்தற்கு அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது.
தா.பழூர், ஆண்டிமடம்
தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணகெதி, நாயகனைப்பிரியாள் பகுதியில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். நாயகனைப்பிரியாள் கிராமத்தில் 92 வயது மூதாட்டி பாப்பா யாருடைய  துணையும் இல்லாமல் நடந்து வந்து வாக்களித்தார். தா.பழூர் ஒன்றியத்தில் 5 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 9 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்ற மணகெதி ஊராட்சியில் மொத்தம் உள்ள ஆயிரத்து 127 வாக்குகளில் ஆயிரத்து 8 வாக்குகள் பதிவாகின. நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 591 வாக்குகளில் 2 ஆயிரத்து 790 வாக்குகள் பதிவாகின. வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற அம்பாபூர் 8-வது வார்டில் உள்ள 396 வாக்குகளில் 291 வாக்குகள் பதிவானது.
இதேபோல் ஆண்டிமடம் ஒன்றியத்தில் பதற்றம் நிறைந்த பகுதியாகக் கருதப்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைதியான முறையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்ற ஓலையூர் ஊராட்சியில் உள்ள 2 ஆயிரத்து 401 வாக்காளர்களில் ஆயிரத்து 788 வாக்காளர்கள் வாக்களித்தனர். இடையக்குறிச்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 375 வாக்காளர்களில் 324 பேர் வாக்களித்தனர். இலையூர் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தமுள்ள 590 வாக்காளர்களில் 490 பேர் வாக்களித்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் 132 அலுவலர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் போலீசாரும், ஊர் காவல் படைவீரர்களும ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் 20-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
78.68 சதவீதம் வாக்குப்பதிவு
அரியலூர் மாவட்டத்தில் நடந்த முடிந்த தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்களிக்க 5 ஆயிரத்து 669 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 332 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 4 ஆயிரத்து 321 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8 ஆயிரத்து 916 பேர் வாக்களித்தனர். இதில் அரியலூர் ஒன்றியத்தில் 79.08 சதவீதமும், திருமானூர் ஒன்றியத்தில் 85.43 சதவீதமும், செந்துறை ஒன்றியத்தில் 67.30 சதவீதமும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 83.31 சதவீதமும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 77.30 சதவீதமும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.96 சதவீதமும் என மொத்தம் மாவட்டத்தில் 78.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Next Story