மாவட்ட செய்திகள்

தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் + "||" + Voters in the election voted enthusiastically

தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
பெரம்பலூர்:

உள்ளாட்சி தற்செயல் தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இறப்பு காரணமாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், கூடலூர் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவியும், நாரணமங்கலத்தில் 3-வது வார்டு உறுப்பினர் பதவியும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசத்தில் 6-வது வார்டு உறுப்பினர் பதவியும், வாலிகண்டபுரத்தில் 7-வது வார்டு உறுப்பினர் பதவியும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஆடுதுறையில் 4-வது வார்டு உறுப்பினர் பதவியும் காலியாக இருந்தது. மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலைப்பாடியில் 7-வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த வார்டு உறுப்பினர் பதவியும் காலியாக இருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதனூர் ஊராட்சி தலைவர், கூடலூர் 5-வது வார்டு, நாரணமங்கலம் 3-வது வார்டு, ஓலைப்பாடி 7-வது வார்டு ஆகிய உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பிரம்மதேசத்தில் 6-வது வார்டுக்கு 3 பேரும், வாலிகண்டபுரம் 7-வது வார்டுக்கு 5 பேரும், ஆடுதுறை 4-வது வார்டுக்கு 2 பேரும் என 3 ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குப்பதிவிற்காக பிரம்மதேசம் 6-வது வார்டுக்கு, பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வாலிகண்டபுரம் 7-வது வார்டுக்கு, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆடுதுறை 4-வது வார்டுக்கு, ஆடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் அலுவலர்கள் வாக்கு பெட்டிகளின் சீல்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, வாக்கு பெட்டியை திறந்து காண்பித்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்து, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து வாக்காளருக்கு வலது கையில் அணிய பாலித்தீன் கையுறை வழங்கப்பட்டது. மேலும் முககவசம் அணிந்து வரும் வாக்காளர்களை மட்டும் வாக்குச்சாடிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். வாக்காளர்கள் உரிய ஆவணத்தை பயன்படுத்தி வாக்களித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று...
வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதனை வாங்கிய வாக்காளர்கள் அந்த வாக்குச்சீட்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளர்களுக்கான சின்னங்களில் முத்திரையை குத்தி, மடித்து வாக்கு பெட்டியில் ேபாட்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். முன்னதாக வாக்களித்தற்கு அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளுக்கு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதில் வாலிகண்டபுரம், பிரம்மதேசம் வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட தலா ஒரு வாக்கு பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் அதற்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆடுதுறை வாக்குச்சாவடியில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டி போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
77.42 சதவீத ஓட்டுகள் பதிவு
இந்த தேர்தலில் வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டில் 423 வாக்காளர்களில், 353 பேர் வாக்களித்ததால், மொத்தம் 83.45 சதவீத ஓட்டுகளும், பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டில் 155 வாக்காளர்களில், 125 பேர் வாக்களித்ததால், மொத்தம் 80.65 சதவீத ஓட்டுகளும், ஆடுதுறை ஊராட்சி 4-வது வார்டில் 299 வாக்காளர்களில், 201 பேர் வாக்களித்ததால் மொத்தம் 67.22 சதவீத வாக்குகளும் பதிவானது. இதன்படி மாவட்டத்தில் 3 ஊராட்சி வார்டுகளில் மொத்தம் 877 வாக்காளர்களில், 319 ஆண் வாக்காளர்களும், 360 பெண் வாக்காளர்களும் என 679 வாக்காளர்கள் வாக்களித்ததால், மொத்தம் 77.42 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
மழையால் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்
வாலிகண்டபுரம், பிரம்மதேசம் வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு தொடங்கியவுடன் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். இதனால் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் ஆடுதுறை வாக்குச்சாவடியில் காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. பின்னர் அவ்வப்போது மழை பெய்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் அந்த நேரத்தில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் வாக்குச்சாவடியில் ஒவ்வொரு வாக்காளர்களாக வந்து வாக்களித்து சென்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாததால், அந்த நேரத்தில் யாரும் வரவில்லை.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற 3 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 23 அலுவலர்கள் பணியிலும், ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசார் வீதமும், ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தாமாகவே முன்வந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து வாக்களிக்க அழைத்து சென்றதை காணமுடிந்தது. பல இடங்களில் முதியவர்களை வாக்களிக்க அவர்களது உறவினர்களே அழைத்த வந்தனர். மேலும் வெயிலை சமாளிப்பதற்காக வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டு, அவ்வப்போது லேசான மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனர் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் உத்தரவிட்டுள்ளார்.
2. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி
9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது.
3. 3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
4. ஐகோர்ட்டு உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை தி.மு.க. அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் முறையாக கடைபிடிக்காமல் தி.மு.க. அரசின் கைப்பாவையாக இருந்தது என்று தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.
5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்.