24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 79 சதவீதம் ஓட்டுப்பதிவு
சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
24 ஊரக உள்ளாட்சி பதவிகள்
சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட மொத்தம் 35 காலி இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கி கடந்த மாதம் 25-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இதில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மீதமுள்ள 24 பதவிகளுக்கு 91 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 857 பேர் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்கும் வகையில் 195 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 58 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 29 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு
இந்த நிலையில் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று காலை 7 மணிக்கு 195 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் ஏராளமானவர்கள் வந்து ஓட்டு போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்காளர்கள் நெரிசல் இன்றி நிற்கும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகள் முன்பும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டன. வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து தான் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அங்கு அவர்களுடைய உடல்வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுடைய கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு வாக்களித்தனர்.
4 நிறங்களில் வாக்குச்சீட்டு
வாக்குச்சாவடிகளுக்கு வந்த முதியவர்களை தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் அழைத்து சென்று அவர்களை ஓட்டு போடுவதற்கு உதவி செய்தனர். நடக்க முடியாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால் ஓட்டு போடுவதற்காக ஏராளமானவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்தனர். இதனால் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
மதியம் 2 மணிக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இருந்தாலும் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றனர். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வாக்களிக்க மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை, கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை என 4 நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 800 ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 6 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த குழுவினர் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.
79 சதவீதம்
தேர்தலையொட்டி 195 வாக்குச்சாவடிகளில் மாவட்ட மற்றும் மாநகர் போலீசார் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று ஓட்டுப்பதிவு முடிவில் மொத்தம் 24 காலி இடங்களுக்கான தேர்தலில் 79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 49 ஆயிரத்து 947 ஆண் வாக்காளர்களும், 47 ஆயிரத்து 680 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கைகளும் என மொத்தம் 97 ஆயிரத்து 629 பேர் ஓட்டுப்போட்டு இருந்தனர். இதில் அதிகபட்சமாக, நங்கவள்ளி ஒன்றியத்தில் 88 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மேச்சேரி ஒன்றியத்தில் 68 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றியம் வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம் (சதவீதத்தில்) பின்வருமாறு:-
ஓமலூர்-78, பனமரத்துப்பட்டி-86, அயோத்தியாப்பட்டணம்-82, எடப்பாடி-87, மேச்சேரி-68, நங்கவள்ளி-88, சேலம்-85, தலைவாசல்-78, வீரபாண்டி-85, தாரமங்கலம்-74, வாழப்பாடி-80, ஏற்காடு-79, கொளத்தூர்-82.
Related Tags :
Next Story