முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 126-ம் ஆண்டையொட்டி பென்னிகுவிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 126-ம் ஆண்டையொட்டி பென்னிகுவிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. 1895-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை ரூ.43 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கர்னல் ஜான் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை அணைகட்டும் பணியை மேற்கொண்டது. இதையடுத்து 1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் பிரபு தேக்கடிக்கு வந்து, முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை தமிழக பகுதிக்கு திறந்துவைத்தார். இவ்வாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 126 ஆண்டு ஆகிறது.
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு, முதன் முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட அக்டோபர் 10-ந்தேதியை, தென் மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கொண்டாடி வருகின்றனர். இதை கொண்டாடும் வகையில், நேற்று லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் அவருடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பொதுச்செயலாளர் பொன்.காட்சிக்கண்ணன், துணைத்தலைவர் ராஜீவ், மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கம்பம் ஒன்றிய செயலாளர் மகேஷ் மற்றும் குண்டாறு பாசன விவசாய சங்க நிர்வாகிகள் செங்கோட்டை ராஜா, செல்லச்சாமி, ரமேஷ் உள்பட விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து குருவனூற்று பாலம் அருகே முல்லைப்பெரியாற்று தண்ணீரில் விவசாயிகள் மலர்தூவி வணங்கினர்.
Related Tags :
Next Story