5 மாவட்டங்களில் இன்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


5 மாவட்டங்களில் இன்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2021 10:33 PM IST (Updated: 10 Oct 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) 5 மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்க மாநில தலைவர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) 5 மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்க மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
அவசர ஆலோசனை கூட்டம்
நாகையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரவேல் முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.50 ஆயிரம் கோடி
தமிழகத்தின் அதிக வருமானம் தரும் துறையாக டாஸ்மாக் உள்ளது. இதன் மூலம் ஆண்டு தோறும் ரூ.40 ஆயிரம் கோடி வரை அரசு கஜானாவுக்கு கிடைக்கிறது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் தொகையை கடையிலேயே வைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பணத்தை கடைகளில் வைக்காமல் எடுத்து செல்ல வேண்டும் என போலீஸ் துறை உத்தரவிடுகிறது. இந்த 2 துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருந்தும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
கடைகளில் வசூலாகும் தொகையை டாஸ்மாக் பணியாளர்ககள் எடுத்து செல்லும் போது தாக்குதல், கொலை செய்து பணத்தை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு தாக்கப்படும் பணியாளர்களுக்கு அரசு எவ்வித நஷ்ட ஈடு கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. பணத்தை கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு
தாக்குதலில் படுகாயமடையும் பணியாளர்களின் முழு சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். சென்னையை போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் நேரடியாக வந்து விற்பனை தொகையை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று (திங்கட்கிழமை) சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை ஆகிய டாஸ்மாக் மண்டலங்களின் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story