வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில்2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ஆற்காடு ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி, திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் ஓச்சேரி சப்தகிரி பொறியியல் கல்லூரி, நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய 7 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறது.
கலெக்டர் ஆய்வு
இம்மையங்களில் சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோளிங்கர் மையத்தில் வாக்குப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு செல்ல தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டு மழை பாதிப்பு இல்லாமல் செல்ல தகரங்கள் அமைத்து தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மேலும் வாக்குச்சீட்டு எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரித்து போடுவதற்கு பெட்டிகள் அமைக்கவும், பதாகைகள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர் மையம் மற்றும் பாதுகாப்பு அறை வாக்கு எண்ணும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் நெமிலி காவேரிப்பாக்கம் மையங்களில் வாக்குச்சீட்டுகளை எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரித்து போடுவதற்கு பெட்டிகள் அமைத்து தயார்படுத்த பட்டுள்ளதை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
பெட்டிகளை சரியாக ஒவ்வொரு வார்டு பதவிகளுக்கும் தவறு இல்லாமல் மேஜையில் வைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
முறையான அறிவிப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக ஒலிபெருக்கிகளை மையங்களில் தேவையான இடங்களில் அமைக்கவும் கேட்டுக்கொண்டார்.
வாக்கு எண்ணும் பணியில் 2811 பணியாளர்கள் 7 மையங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு வாக்கு எண்ணும் பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மேலும் மையம் முழுவதும் 652 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போதிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், தாசில்தார்கள் பழனிராஜன், ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
ஓட்டுப்பெட்டிகள் வைத்துள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
Related Tags :
Next Story