வாக்கு எண்ணிக்கை மையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா


வாக்கு எண்ணிக்கை மையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா
x
தினத்தந்தி 10 Oct 2021 11:17 PM IST (Updated: 10 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 கிராமங்களில் நேற்று முன்தினம் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 

இதையடுத்து 224 வாக்குப்பெட்டிகள் ஆம்பூர் அருகே சோமலாபுரம்  அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு முன்பாக வெங்கடசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் முகவர் ஒருவர் வந்து சென்றதாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக அ.தி.மு.க. மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து அ.தி.மு.க.வேட்பாளர் மற்றும் இதரகட்சி வேட்பாளர்கள் உள்பட அவரது ஆதரவு கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணி முதல் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே திரண்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்த நிலையில் அங்கு கூடியிருந்த  200-க்கும் மேற்பட்டோர் திடீரென வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story