பரமத்தி அருகே ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறி பொதுமக்கள் திடீர் போராட்டம்-லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பரமத்தி அருகே ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்:
சிறைபிடிப்பு
பரமத்திவேலூர் அருகே உள்ள வில்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் பள்ளம் தோண்டி கடந்த 2 நாட்களாக வெள்ளை நிற மண் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று மண்ணை கொட்டிய டிப்பர் லாரி மற்றும் குழி தோண்ட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
இதுகுறித்து பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் மற்றும் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாசில்தார், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர், கிணற்று நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், எனவே கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story