தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது
ஒடிசா மாநிலத்தில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளாவுக்கு புறப்பட்டது. இந்த லாரியை கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் அனுப் (வயது31) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி (40) வந்தார்.
இந்த லாரி நேற்று பகல் 11 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையின் சென்டர் மீடியனில் மோதியது. பின்னர் அந்த லாரி நிற்காமல், எதிர்திசை சாலைக்கு சென்று கவிழ்ந்தது. மேலும் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி தவித்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லாரி மற்றும் அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தால் மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தொப்பூர் கணவாயில் சாலையில் இருபுறமும் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story