கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் சிறுமி பலி


கள்ளக்குறிச்சி அருகே  கிணற்றில் மூழ்கி சிறுவன் சிறுமி பலி
x
தினத்தந்தி 10 Oct 2021 5:54 PM GMT (Updated: 10 Oct 2021 5:54 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் சிறுமி பலியாகினர்

கள்ளக்குறிச்சி

லாரி டிரைவர்

கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவா் லாரி டிரைவர் ஜெயகாந்தன். இவருடைய மகள் சஞ்சனா (வயது 10). இவள்அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயகுமார் மகன் குமரேசன்(10). இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.  இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சனா, குமரேசன் இருவரும் எதிர்பாராதவிதமாக அங்குள்ள திறந்தவெளி கிணற்றில் தவறிவிழுந்தனர்.

பெற்றோர் கதறல்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர், சிறுமியர் ஓடிச்சென்று இருவரின் பெற்றோரிடமும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் கிராமமக்களை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட கிணற்றை நோக்கி ஓடி வந்தனர்.  அப்போது அங்கே மிதந்து கொண்டிருந்த சஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், சஞ்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தீயணைப்பு வீரர்கள்

இதற்கிடையே கிணற்றில் தவறி விழுந்த குமரேசனை காணவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி குமரேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் நடந்த சம்பவம் குறித்து கிராமமக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பலியான குமரேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக்கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவத்தால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.


Related Tags :
Next Story