வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,337 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,337 பேர் எழுதினார்கள்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நடந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை 1,337 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு
இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வருவாய்பணி உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதன்மை தேர்வு (சிவில் சர்வீஸ்) நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3,234 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் தேர்வு எழுத வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட 12 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதன்மை தேர்வின் முதல்தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிவரை நடந்தது. காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்குலேட்டர், கைக்கடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு அறையிலும் 24 பேர் தேர்வு எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
1,337 பேர் தேர்வு எழுதினர்
சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வின் முதல் தாளை 1,337 பேர் எழுதினார்கள். 1,897 பேர் எழுதவில்லை.
2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடந்தது.
வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட பல்வேறு மையத்தில் நடந்த தேர்வை வேலூர் மாவட்ட குடிமைப்பணி தேர்வு ஒருங்கிணைப்பாளரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
இதேபோன்று யு.பி.எஸ்.சி. தேர்வு கண்காணிப்பு சிறப்பு அலுவலர் ஹர்பிரீத்சிங், தேர்வு பார்வையாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வள்ளலார் ஆகியோரும் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கருவி பொருத்தப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story