கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கரூர்,
மக்களை தேடி மருத்தும் திட்டம்
கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையத்தில் மக்களை தேடி மருத்தும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி நிலவரப்படி 19.98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 22 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சதவீதம் மேலும் 2 சதவீதம் உயரும். 70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது.
1 சதவீதத்திற்கும் குறைவாகும்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் 1,345 பேரும், நேற்று 1,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1½ லட்சம் பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இது தெரிய வந்தது. மொத்த பரிசோதனையில் 0.80 சதவீதம். அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 600 பேர். இதில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 921 பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்து 2-வது இடத்தில் கரூர் உள்ளது.
18¾ லட்சம் பேர் பயன்
18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் செலுத்தும் பணி தொடங்கினால் அதனை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 18 லட்சத்து 87 ஆயிரத்து 703 பேர் பயனடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடன் இருந்தார்.
Related Tags :
Next Story