ஓட்டு எண்ணும் பணியில் 2,957 பேர் ஈடுபடுகின்றனர்


ஓட்டு எண்ணும் பணியில் 2,957 பேர் ஈடுபடுகின்றனர்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:39 PM IST (Updated: 10 Oct 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 2,957 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 2,957 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணும் மையங்கள்

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6,9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. முதற்கட்டமாக காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த தேர்தலில் 77.63 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

இந்த நிலையில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்த வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 81.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்குச்சாவடி மைய மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் ‘சீல்' வைக்கப்பட்டன.

பின்னர் அவை வேனில், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.

வேலூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், காட்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் காட்பாடி அரசு சட்டக்கல்லூரியிலும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் கணியம்பாடி கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வாக்குகள் இறையன்காடு ஸ்ரீஅன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் குடியாத்தம் கே.எம்.ஜி. கலைக்கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய வாக்குகள் பேரணாம்பட்டு மேரிட்ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக்கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்' வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தவிர வாக்கு எண்ணும் மையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறும்.

வாக்குப்பெட்டியில் உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஓட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். 

அதன் பின்னர் அடுத்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடக்கும். 7 மையங்களிலும் வாக்கு எண்ணும் பணியில் 2,957 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளின் வாக்குப்பெட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

வாக்குப்பெட்டிகள் 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 50 போலீசார் 2 ஷிப்ட்களாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

6 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வாக்குச்சாவடி மையத்தில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அதிலுள்ள வாக்குகள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என தனித்தனியாக பிரித்து கட்டப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் அப்போதே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் 520 பேர் மற்றும் அதிகாரிகள் 50 பேர் என மொத்தம் 570 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உரிய அடையாள அட்டை வைத்துள்ள வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

உரிய அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story