ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்வைப்பு-துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
79 சதவீத வாக்குப்பதிவு
சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் உள்பட காலியாக இருந்த 24 பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 195 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த இந்த தேர்தலின் முடிவில் மொத்தம் 79 சதவீத வாக்குகள் பதிவானது. 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 128 பேர் வாக்களிக்க தகுதியானவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் 2 திருநங்கைகள் உள்பட 97 ஆயிரத்து 629 பேர் மட்டுமே வாக்களித்தனர். மீதமுள்ள 25 ஆயிரத்து 499 பேர் வாக்களிக்க வரவில்லை. தேர்தலின் போது சில வாக்குச்சாவடிகளில் மட்டும் பிரச்சினைகள் நடந்தது. மற்ற இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது முடிந்தது.
12 வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 12 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர், ஓமலூர் ஒன்றியம் சிக்கனம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் புளியம்பட்டி 3-வது வார்டு, கோட்டமேட்டுப்பட்டு ஊராட்சி 5-வது வார்டு ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் அருகே உள்ள கருப்பூர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வாக்குப்பெட்டிகள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சீல் வைப்பு
பின்னர் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் மற்ற 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 20 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story