சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் நடந்தது: 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் கார்மேகம் தகவல்


சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் நடந்தது: 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2021 3:59 AM IST (Updated: 11 Oct 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 1,392 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 1,392 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 11 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
1,392 மையங்கள்
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் உள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகள், 107 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 1,235 வாக்குச்சாவடி இடங்கள் என 1,392 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதனால் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கிராம புறங்களில் அதிகமானோர் மையங்களுக்கு சென்று வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் இந்த பணியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மகுடஞ்சாவடி ஒன்றியம்
மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இடங்கணசாலை கேகே.நகர் அரசு பள்ளி உள்பட பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி மையங்களையும் ஆய்வு செய்து தடுப்பூசி போடுவது குறித்து கேட்டறிந்தார்.
தங்கும் விடுதியில் ஆய்வு
சேலம் மாநகர் பகுதியில் 200 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் நரசோதிப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம் உயர்நிலைப்பள்ளி, அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று மாலை கொண்டலாம்பட்டி பகுதிக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆய்வு நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து விவரம் கேட்டார். அப்போது அங்கு 12 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பணியாளர்களை அங்கு வரவழைத்து அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தார். அதே போன்று அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியில் தங்கி உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கும் பணியாளர்களை வரவழைத்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தார். இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் மணிமொழி, சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
1 லட்சம் பேருக்கு தடுப்பூசி
மாவட்ட முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் நேற்று 1 லட்சத்து 2 ஆயிரத்து 111 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Next Story