தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் யூனியன் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் யூனியன் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 11 Oct 2021 5:09 PM IST (Updated: 11 Oct 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் யூனியன் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக தற்காலிக பெண் ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 37). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்து உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு இருந்த போலீசார் ராமலட்சுமியை தடுத்து மீட்டனர். தொடர்ந்து அவரை சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
இது தொடர்பாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் குறுக்குச்சாலையில் வசித்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தேன். நான் பணியில் சேர்ந்தது முதல், அங்கு பணியாற்றி வந்த ஒருவர், உயர் அதிகாரி துணையுடன் பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்தார். என்னையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை எனது வங்கி கணக்குக்கு மாற்றி அதனை அவர்கள் எடுத்து வந்தனர்.
பணியிலிருந்து நீக்கம்
தற்போது என்னை அவர்கள் தகாத உறவுக்கு அழைத்தனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் என்னை பணியில் இருந்து நீக்கி, மிரட்டி அனுப்பிவிட்டனர். ஆகையால் நேர்மையான விசாரணை அதிகாரியை நியமித்து தங்களது நேரடி விசாரணையின் மூலம் உண்மையான குற்றவாளியை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும், வழக்கு பதிவும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story