திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 6:15 PM IST (Updated: 11 Oct 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
அப்போது திண்டுக்கல் மொட்டனம்பட்டியை அடுத்த அந்தோணிநகர் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலால் வேறுயாரும் பாதிக்கப்படாத வகையில் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
வீட்டுமனை பட்டா 
அதேபோல் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், வத்தலக்குண்டு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் வீட்டு மனை பட்டா வழங்கும்படி மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நிலக்கோட்டை தாலுகாவில் நெடுஞ்சாலை ஓரம் குடியிருப்பவர்களை காலி செய்யும்படி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் எங்கு செல்வது என்று தெரியவில்லை. சொந்த வீடு இல்லாமல் ஒரே குடிசையில் 3-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். தினமும் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்கிறோம். எனவே எங்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறினர்.
விவசாய நிலம் ஆக்கிரமிப்பு 
கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த செம்பிரான்குளம் மலைக்கிராம மக்கள் கொடுத்த மனுவில், செம்பிரான்குளத்தில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். அரசு புறம்போக்கு நிலத்தில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறோம். இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும் நாங்கள் நடவு செய்த காபி, எலுமிச்சை, அவகோடா, மிளகு செடிகளை நாசப்படுத்தி, குடிசைகளையும் சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story