உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்புடன் 9 இடங்களில் இன்று நடக்கிறது


உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்புடன் 9 இடங்களில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 11 Oct 2021 7:17 PM IST (Updated: 11 Oct 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்புடன் இன்று 9 இடங்களில் நடக்கிறது.


திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 28 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ஆவிளிபட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி வார்டுகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
எனவே அந்த 15 பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மேலும் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், சத்திரப்பட்டி, வில்பட்டி ஆகிய 2 ஊராட்சி தலைவர்கள், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 13 பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை 
இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களான, 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. அதன்படி திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வத்தலக்குண்டு, வேடசந்தூர், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் தனி அறைகளில் வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 60 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
பலத்த பாதுகாப்பு 
இந்த வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள் அனைவரும் மையத்துக்குள் வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து 7.30 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களை தவிர பிற நபர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 9 இடங்களிலும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று மாலை பழனி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.


Next Story