கோவையில் இதுவரை 700 பவுன் நகைகள் திருட்டு
கோவையில் இதுவரை 700 பவுன் நகைகள் திருட்டு
கோவை
கோவை நகரில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை குறிவைத்து 700-பவுன் நகை திருட்டு போய் உள்ளது. இதுவரை குற்றவாளிகள் சிக்காததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவையில் தொடர் திருட்டு
கோவை நகரில் கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடந்ததால், கடந்த ஆண்டு திருட்டு குற்றங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத்தொடங்கியதும் பலரும் சொந்த ஊர்களுக்கு அடிக்கடி வீட்டை பூட்டிச்செல்ல தொடங்கியதால் ஏப்ரல் மாதம் முதல் இந்த மாதம்வரை 7 மாதங்களில் வீடு புகுந்து திருடும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எந்தவகை பூட்டை பயன்படுத்தி பூட்டி இருந்தாலும் திருட்டு ஆசாமிகள் கைவரிசை காண்பித்து பணம், நகையை திருடிச்செல்கிறார்கள்.
700 பவுன் நகை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணபதி மணியக்காரன்பாளையம் பகுதியில் தினகரன் என்ற இரும்பு வியாபாரியின் வீட்டு பூட்டை உடைத்து 101 பவுன் நகையை திருடிச்சென்றனர். கணபதி பார்க்டவுன் பகுதியில் துணிக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 51 பவுன் நகை திருட்டு போனது. பீளமேட்டில் என்ஜினீயர் சுரேஷ் என்பவருடைய வீட்டில் 63 பவுன் நகை திருட்டு போனது. சுங்கம் பகுதியில் உள்ள வயதான தம்பதிகள் இருந்த வீட்டில் 150 பவுன் நகை திருட்டு போனது.
இதுபோன்று கடந்த 7 மாதங்களில் நகரின் பல்வேறு வீடுகளில் 700 பவுன் நகைக்கு மேலும் திருட்டு போய் உள்ளது. லட்சக்கணக்கான பணமும் திருட்டு போய் உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன் சரி. ஆனால் குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை.
பொதுமக்கள் அச்சம்
இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் செல்வதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. பகல் நேரத்தில் நோட்டமிட்டுவிட்டு, இரவில்வீட்டின்பூட்டை உடைத்து திருடுகிறார்கள். சில வீடுகளில் இரவில் மாடியில் வீட்டு உரிமையாளர் தூங்கினால், தரைதளத்தின் பூட்டை உடைத்து திருடுகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் திருட்டு ஆசாமிகளின் உருவப்படங்கள் பதிவான நிலையிலும் திருடர்களை பிடிக்கும் பணி தொய்வு அடைந்த நிலையில் உள்ளது.
இதனால் மர்மநபர்கள் மீண்டும், மீண்டும் கைவரிசை காண்பிக்கிறார்கள். சிறையில் பெரிய குற்றவாளிகளுடன் ஆலோசனை நடத்தி, சிறையில் இருந்து வெளியே வந்ததும், சாதாரண பிக்பாக்கெட் ஆசாமி வீடுபுகுந்து திருடுவதில் கைதேர்ந்தவனாக திருட்டு குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் கோவையில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளார்கள்.
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை
இந்த திருட்டு குற்றங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கோவையில் 15 போலீஸ் நிலைய பகுதிகளிலும் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தகவல் அளிக்காத 4 போலீசாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இரவு ரோந்தில் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பதிவான கைரேகை மூலம் பழைய குற்றவாளிகளும் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், நகரில் வீடுபுகுந்து திருட்டு குற்றங்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story