‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சேதமடைந்து வரும் மேல்நிலை குடிநீர் தொட்டி
பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் 10-வது வார்டு விநாயகர்புரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து வரும் மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடகிருஷ்ணன், அ.கலையம்புத்தூர்.
சாலையில் கொட்டப்படும் கழிவுகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மொட்டனூத்து ஊராட்சி பகுதியில் சாக்கடை கால்வாயில் தேங்கும் குப்பை கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அள்ளி சாலையில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், மொட்டனூத்து.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் 5 மறுகால் காலனியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்த குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே மின்மோட்டார் பழுதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோவன், அ.கலையம்புத்தூர்.
சேதமடைந்த தெருவிளக்குகள்
பெரியகுளம் நகராட்சி தென்கரை 28,29-வது வார்டு பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் சேதமடைந்து கிடப்பதால் இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் வார்டு பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் இரவில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிபாரதி, தென்கரை.
தாமதமாகும் சிமெண்டு சாலை பணி
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி 11-வது வார்டு பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக ஜல்லிக்கற்கள், மணல் உள்ளிட்டவைகள் அப்பகுதியில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் சிமெண்டு சாலை பணி தாமதமாகிக்கொண்டே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சிவகிரிப்பட்டி.
இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து பொன்னகரம் எம்.எஸ்.நகரில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. மேலும் இறைச்சி கழிவுகளும் கால்வாயில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மார்ட்டின் துரைராஜ், பொன்னகரம்.
மண்ணுக்குள் புதைந்த குடிநீர் குழாய்
பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூரில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாதபடி மண்ணுக்குள் புதைந்தநிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலையில் தான் அந்த குழாய் உள்ளது. இதனால் பொதுமக்கள் டம்ளரில் குடிநீரை பிடித்து குடத்தில் ஊற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் குழாயின் உயரத்தை அதிகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகுநாச்சி, சின்னக்கலையம்புத்தூர்.
Related Tags :
Next Story