கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற முன்னேற்பாடு கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டார பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
மூன்றடுக்கு பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 9 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று(செவ்வாய்கிழமை) நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் 3,810 பேர் ஈடுபடவுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஏற்றவாறு அந்தந்த தேர்தல்களுக்கான முகவர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படுவதோடு உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அனுமதி சீ்ட்டு
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் கையுறை, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மையத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வட்டார பார்வையாளரும், 6 நுண்பார்வையாளர்களும் பணிகளை கண்காணிப்பார்கள். மாவட்டத்தில் மொத்தம் 67 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குகள் பிரிக்கும் அறையில் ஒரு நபரும், வாக்கு எண்ணும் அறைகளில் 4 நபர்களும், ஒருங்கிணைப்பு அலுவலராக ஒரு நபரும் பணிபுரிய உள்ளனர். தபால் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அனுமதி சீட்டு இன்றி யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பரிசோதனை
பொது மற்றும் வட்டார பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரை தவிர வேறு யாரும் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு மையத்துக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் காவல்துறை அலுவலர்கள் குழுவாக இணைந்து மையத்தின் நுழைவு வாசலில் பரிசோதனை செய்து தகுதியானவர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி) மணி மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டார பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story