விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை


விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை
x
தினத்தந்தி 11 Oct 2021 9:57 PM IST (Updated: 11 Oct 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கன மழை பெய்தது.

விழுப்புரம், 

தென்மேற்கு பருவமழை இன்னும் நீடித்து வரும் நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

இதனால் விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
மேலும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மயிலம், வானூர், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செஞ்சி- 49
மரக்காணம்- 42
வானூர்- 40
சூரப்பட்டு- 38
கெடார்- 35
செம்மேடு- 22
வளவனூர்
- 19.50
கஞ்சனூர்- 19
நேமூர்- 15
விழுப்புரம்- 13
கோலியனூர்- 12
முண்டியம்பாக்கம்- 10
அவலூர்பேட்டை- 9
மணம்பூண்டி- 9
திருவெண்ணெய்நல்லூர்- 8
அரசூர்- 7
முகையூர்- 6
திண்டிவனம்- 5.20
வல்லம்- 4
அனந்தபுரம்- 4
வளத்தி- 3

Next Story