குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் சாவு


குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் சாவு
x

குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

குத்தாலம்:
குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கியது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது40). இவர்களின் குடிசை வீடு சேதமடைந்து இருந்ததால் இதனை புதுப்பிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு புது கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. 
 அன்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மாரியம்மாள் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். குடிசை வீடு சீரமைப்பு காரணமாக வீட்டிற்கு செல்லக்கூடிய மின் வயர்கள் மற்றும் மீட்டர் பாக்ஸ்  திறந்த நிலையில் இருந்துள்ளது.  அதனை மாரியம்மாள் மூட முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாவு
இதேபோல் கொள்ளிடம் அருகே கடலோர கூழையார் கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி லட்சுமி (42). இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூழையார் கிராமம் பெருமாள் கோவில் அருகே மெயின் ரோட்டில் வந்த போது மழையால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் இருந்து அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பி  லட்சுமியின் கழுத்தில் பட்டதில் அவரை மின்சாரம் தாக்கியது.
 இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story