ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம்


ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2021 5:16 PM GMT (Updated: 11 Oct 2021 5:16 PM GMT)

சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

சிவகங்கை,

சிவகங்கை ஒன்றியம், முத்துப்பட்டி நடுநிலைப்பள்ளியில் 26.11.2019 அன்று மாணவர்கள் பள்ளி விட்டு செல்லும் போது 1-ம் வகுப்பு மாணவன் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்தான். இதற்கு காரணமான அப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கீதாவை தலைமையாசிரியை கீதாஞ்சலி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் கற்பித்தலுக்கு வைத்துள்ள மாதிரி வேதியியல் உப்பை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முத்துப்பட்டி தலைமையாசிரியை கீதாஞ்சலியை பாசாங்கரை நடுநிலைப்பள்ளிக்கும், பாசாங்கரை தலைமையாசிரியை சாந்தியை முத்துப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கும், அறிவியல் பட்டதாரி ஆசிரியை  சங்கீதா அண்ணாநகர் பள்ளிக்கும் தற்காலிகமாக மாறுதல் செய்யப்பட்டனர்.
20 மாதங்களுக்கு மேலாக தற்காலிக பணியில் இருப்பதால் தலைமையாசிரியர் இருவரும் நிதி சார்ந்த கோப்புகளை கையாள்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் வருகிற 12-ந்தேதி மாறுதலாகி செல்ல இருப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர மாறுதல் உத்தரவு வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி உள்ளிட்டஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story