கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று முதன்மை கல்வி அலுவலர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதன்மை கல்வி அலுவலர் தனது அறையில் இருந்தார். அவரை அறைக்குள்ளேயே சிறை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்கள் குறித்து அறிவிப்பு பலகைகளில் அறிவிப்பு செய்யப்படவில்லை. எனவே, அறிவிப்பு பலகைகளில் கட்டண விவரங்களை வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சின்னமனூரை சேர்ந்த மாணவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத நிலையில் அவனிடம் கூடுதல் கட்டணம் கேட்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பிறகு முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அறிவிப்பு பலகைகளில் அரசு நிர்ணய கட்டண விவரத்தை வைக்காத பள்ளிகள் மீதும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவனிடம் கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story